எல்லாருக்கும் பிடித்தமான ஒரு மழை நாளில் தான் என்னை அவர்கள் இங்கு கொண்டுவந்தார்கள். என் அம்மா என்னுடன் இல்லாத நேரத்தில் தான் இவர்களால் என்னை இங்கு கொண்டுவர முடிந்தது. அந்த வீட்டில் இருந்த சிலருக்கு என்னையும் என் மூக்கில் இருந்த செங்காமட்டை கலர் பெரிய பொட்டையும் சுத்தமாக பிடிக்கவில்லையென்றாலும் கூட அந்த வீட்டில் இருந்த சிறுவர்கள் எல்லாருக்கும் என்னை மிகவும் பிடித்துபோய்விட்டது. என் வெள்ளை நிறமும் மூக்கில் மட்டும் உள்ள அந்த செங்காமட்டை நிறமும் என் ரோமத்தின் அடர்த்தியும் அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது போலும். எல்லாரையும் மீறி என்னை அந்த வீட்டின் நடு அறைக்கே கொண்டு போய்விட்டார்கள்.
என் காதுகளை பிடித்து தூக்கி பிடித்து நான் சுறுசுறுப்பானவனாக வருவனா என்று சோசியம் பார்த்தான் அந்த வீட்டின் மூத்த கிழவன். நான் வலியால் உடல்குலுக்கி சினுங்கியபோது மொத்த வீடுமே நான் மிக மிக சுறுசுறுப்பானவன் எனக் கத்தி கூச்சலிட்டது. என் நெற்றியில் ஒரு ப்ளாஸ்டிக் பொட்டை வைத்து கைதட்டி தனியாய் சிரித்தாள் அந்த வீட்டின் கடைசி சிறுமி. வட்டமான கிண்ணத்தில் பால் கொண்டு வந்து அதில் விரல் முக்கி என் நாவினில் வைத்தால் அந்த வீட்டு எஜமானியம்மா. ஆமாம் அவள் தான் எஜமானியம்மாவாக இருக்க வேண்டும். மழையில் நனைந்துபோன எல்லாருடைய தலையையும் அவள்தான் அதட்டி துவட்டி கொண்டிருந்தாள்.
“ஏல லூசு பயலுவளா இந்த நாய்குட்டிக்கு வாலை பாரு இப்பவே சுருட்டிக்கிட்டு முதுகை தொடுது இது குடும்பத்துக்கு ஆகாதுடா போய் எங்க தூக்கினீங்களோ அங்க கொண்டுபோய் விட்டுருங்கடா” என்று ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு சொன்னார் அந்த வீட்டு எஜமானி. ஆனால் குழந்தைகள் என்னை அவர்களுக்கு பிடித்தமான தலையனையை போலவோ இல்லை ஒரு வெளிநாட்டு பொம்மை போலவோ கட்டிபிடித்துக்கொண்டதால் எனது வருகையும் எனது இருப்பும் அந்த வீட்டு எஜமானராலும் எல்லோராலும் ஏற்றுகொள்ளபட்டது.
சச்சின்.
கங்குலி
ராஜா
விஜய் என எனக்கு எனக்காய் அவர்கள் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை யோசித்துகொண்டிருந்தார்கள். கடைசியாக சுரேஷ் என்றார். அந்த வீட்டின் மூத்தகிழவன். ஏனெனில் அந்த வீட்டில் என்னைபோலவே ஆனால் முழு செங்காமட்டை கலரில் முன்னாடி ஒருத்தன் இருந்தானாம். ஒரு விபத்தில் கிழவனை காப்பாற்றி அவன் போய் சேர்ந்துவிட்டானாம். ஆகையால் அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பிடிவாதமாக பெயரிட்டார்கள்.
சுரேஷ் இப்படித்தான் என்னை அவர்கள் அழைப்பார்கள் சிலநேரம் மெதுவாய் சில நேரம் சத்தமாய். அந்த வீட்டின் எந்த அறைக்கும் சென்று வர எனக்கு அனுமதி உண்டு. எங்கு சென்றாலும் என்னை அவர்கள் அழைத்து செல்லாமல் போனதில்லை. அவர்களுக்கு என் அழகான அடர்த்தியான வெண்மையான ரோமங்கள் ரொம்பவே பிடித்துப்போயிருக்கும் போல எந்நேரம் அதை யாராவது தடவிவிட்ட வன்ணம் இருப்பார்கள். நானும் நன்றி மறவாமல் என் முன்னங்காலை தூக்கி அவர்கள் மூக்கில் முகத்தில் முத்தமிட முயலுவேன். சிலநேரம் சந்தோசபடுவார்கள். பலநேரம் அதட்டிவிடுவார்கள். ஆனாலும் அவர்களின் தீராத துக்கத்தையும் சந்தோசங்களையும் என்னுடன் பகிர்ந்துகொள்ள தவறியதில்லை. அந்த வீட்டின் பெண்கள் தனிமையில் என்னிடம் என்னன்னவோ சொல்லி அழுது புலம்பியதை நான் யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் அந்த வீட்டின் ஆண்கள் யார் மீதோ உள்ள கோபத்தை என் மீது காட்டுவது எல்லாருக்கும் தெரியும்.
அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டு இன்றோடு சரியாக ஏழு வருடம் ஆகிவிட்டது. நான் அந்த வீட்டில் அந்த மூத்தகிழவனின் சாவையும் அந்த வீட்டு எஜமானனின் தங்கை திருமணத்தையும் பார்த்துவிட்டேன். கிழவன் இறந்த போது உண்மையாகவே நான் அழுது அடக்கம் செய்யும் இடம் வரைக்கும் அவர்கள் பின்னாடி போய்வந்தேன். எஜமானனின் தங்கச்சி திருமணம் முடிந்து போனபோது அந்த வாகனத்தின் பின்னாடி மெயின்ரோடு மடை வரைக்கும் நான் ஓடினேன். அவள் சினுங்கலாய் சந்தோசமாய் கோபமாய் அதட்டலாய் சிறு கல்லை என் மீது வீசி அந்த வீட்டிற்கு என்னை திருப்பி அனுப்பினாள்.
இப்போது எனக்கு வயதாகிவிட்டது . என் ரோமங்கள் என் உடம்பிலிருந்து உதிர்ந்து அந்த இடத்தில் புண்கள் வெடித்து கிளம்பியது என் குற்றமல்ல. மேலும் என் உடம்பில் இருந்து வரும் அந்த துர்நாத்ததிற்கும் என் முதுகு புண்களை காக்கைகள் கொத்தியதற்கும் நான் பொறுப்பல்ல. ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் மீது நான் கோபப்படவில்லை.
மாங்கொட்டாரத்தாளையும், ஐயாகுட்டியையும் நான் தான் வெறி பிடித்து கடித்தேன் என்று சொல்வதை தான் என்னால் தாங்கிகொள்ள முடியவில்லை. மாங்கொட்டாரத்தா அந்த பல்லு போன பாழாப்போன கிழவி என் வாலை மிதித்து நசுக்கினால் வலி பொறுக்க முடியாமல் கடித்துவிட்டேன். அந்த ஐயாகுட்டி கண் தெரியாத கபோதி ஒரு ஓரமாய் படுத்திருந்த என் மீது பொத்தென்று விழுந்ததால் அவசரத்தில் பயந்து கடித்தேன்.
நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை அப்படி செய்யும் அளவுக்கு என் உடம்பில் எனக்கு திறன் இல்லை. அதற்காக “நான் ஏதோ செத்துப்போன கழுதை கறியை தின்னுட்டு வந்து கோட்டி புடிச்சு எல்லாரையும் கடிக்கிறேன்னு இவர்கள் சொல்வது அபாண்டம்” இதை கேட்டு தான் என் இரக்கமில்லாத எஜமான் என் கண்களை ஒரு முறை கூட பார்க்காமலே எனக்கு மரண தண்டனை கொடுத்தான்.
“ஏலேய் பசங்களா சுரேஷ் இனி தேறாதுன்னு நினைக்கிறேன் நோய் பெரிசா ஆகி கோட்டி அதிகமாகிறதுக்குள்ள எங்கயாவது கொண்டுபோய் கொண்ணுபோட்டுடுங்க”
“ஐயா அதெல்லாம் வேண்டாம் தாயா பிள்ளையா எங்க கூடவே வளந்துட்டுபா கொண்ணாம ஆத்தங்கரைக்கு அந்த பக்கம் கொண்டுபோய் விட்டுட்டு வந்திருங்க”
இப்படி சொன்ன அந்த வீட்டு எஜமானி கொஞ்ச நேரம் அங்க நின்னிறுக்கலாம்.ஆனால் அவள் வேகமாய் சமயலறைக்குள் போய்விட்டாள்.
“அதெல்லாம் வேண்டாம்பா ஆத்தை தாண்டி வந்தாலும் வந்துரும் பேசாம கொண்டு போய் கயித்தோட ரயில்வே தண்டவாளத்தில கட்டி போட்டம்னா ரயில்ல அடிப்பட்டு செத்துட்டு போகுது பாவம் நமக்கு வராதுலா” பக்கத்து வீட்டு அண்ணாத்துரை ரொம்ப சந்தோசமா சொன்னான். அவனை ஒரு முறை கோபமாய் பார்த்து நான் குலைத்ததற்காய்.
“என்னை பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது ஆனால் அது எங்க கண்ணு முன்னாடி வேண்டாம்பா” என்று என் எஜமான் உள்ளே போய்விட்டார். அவர்கள் என்னை ஏமாற்றுவதாக நினைத்து என்னை பிடிக்க எனக்கு சோறு வைத்தார்கள். “எனக்கு ஏனோ அந்த நேரத்தில் சாகவேண்டும் என்று தோன்றியதால் சோத்தை தொடாமலே அவர்கள் பக்கத்தில் போய் நின்றேன். ஆனால் என் வாலை நான் ஆட்டவில்லை.
மூன்று வாலிபர்கள் என்னை கயிற்றை கட்டி இழுத்துகொண்டு வந்தார்கள். நான் எந்த மறுப்பும் இல்லாமல் அவர்கள் பின்னாடி வந்ததை ஒருவன் பாவமோடு பார்த்தான். என்னை அவர்கள் அந்த ஆலமரத்திற்கு கொண்டு வந்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது. அவர்கள் என்னை என் நண்பன் வெள்ளையனை போன வாரம் இந்த மரத்தில் தூக்கிலிட்டதை போலவே தூக்கிலிடபோகிறார்கள் என்று.
ஒருவன் மரத்தில் மேலே ஏறி கயிற்றை கிளையை தாண்டி போட்டான் . என் கழுத்தில் அந்த கயிற்றின் சுறுக்கு இருந்தது. ஒருவன் என்னை பார்த்து ”யோவ் நீர்தான் வரிகட்ட மறுக்கும் வாய்சவடால் கட்டபொம்மனோ இன்னும் சிறிது நேரத்தில் பாருமய்யா உன் முடிவை ஆமாம் உன் கடைசி ஆசை என்ன சொல்” என்றான். இன்னோருவன் ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து என் முகத்தில் தெளித்து பாவத்தை போக்கினான். நான் தலையை உதற தூரத்தில் சிறுவர்கள் ஆர்பரிக்க இந்த வாலிபர்கள் சந்தோச ஊளையிட என் கயிற்று சுருக்கை கிளைக்கு அந்த பக்கம் நின்று அவர்கள் இழுத்தார்கள்.
என் கழுத்து எழும்புகள் மொறிய தொடங்கியது. எனக்கு நன்றாகவே தெரிந்தது. நான் வலியால் ஓலமிட்டேன் ஆனால் என் வாலை நான் ஆட்டவில்லை. ஆட்டப்போவதுமில்லை. என் கண்கள் இருண்டது நாக்கு என் வாயிற்குள் இருக்க மறுத்தது. என் அசைவற்ற எதிர்பற்ற உடல் அவர்களுக்கு என் இறப்பை அறிவித்தது. ஆனால் நான் இறக்கவில்லை இறந்துகொண்டிருந்தேன். என்னை இறக்கி தர தர வென பரும்பு கிடங்குற்குள் அவர்கள் இழுத்துகொண்டு போவது போலிருந்தது.
கிடங்கிற்குள் போட்டுவிட்டு அவர்கள் கிளம்பும் போது சாவின் விளிம்பில் கிடந்தேன். இன்னும் சரியாக இரண்டு நிமிடங்களில் நான் செத்துபோவேன் என்று எனக்கு தெரியும். அப்போது ஒருவன் சொன்னான்
“மாப்ள ஒருவேள சில நாய்களுக்கு காத்த குடிச்சு உயிர் வந்தாலும் வந்துரும் ல அதனால ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி நாய்க்கு மேல வைச்சிட்டு போவோமா”
“அட போடா ….பாவம் செத்துப்போச்சு அதப்போய் விடு வா……..ஆமா இந்த நாய் பேரு என்ன”
அவசரமாய் கேட்ட அவனிடம் மெதுவாய் நான் சொன்னேன் அவனுக்கு கேட்டதோ கேக்கலையோ “அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்” என்று……
நன்றி : காட்சி ~ http://kaattchi.blogspot.com
No comments:
Post a Comment